போரூரில் கஞ்சா கடத்தியதில் மேலும் ஒரு போலி பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில் வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சோதனையில் ஈடுபட்ட போலீசார் கஞ்சா கடத்தி வந்த சூர்யா(வயது 30), பிரவீன்(வயது 29), ஆகிய இருவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் தங்களை நிருபர்கள் எனக் கூறி போலீசாரை மிரட்டினார்கள்.விசாரணையில் இருவரும் போலி நிருபர்கள் என தெரிய வந்தது.இதனால் போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போரூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா கடத்தலுக்கு தலைவனாக வினோத் குமார்(வயது 37) என்பவர் செயல்பட்டு வந்ததாக தெரிய வந்தது. இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்து வந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்குமாரை போரூர் தனிப்படை போலீசார் கைது செய்து , போரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் வீட்டை காலி செய்து பொருட்களை லோடு லாரியில் ஏற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு செல்வார்.அங்கு கஞ்சாவை வாங்கிக் கொண்டு , அதே லாரியில் வீட்டை காலி செய்த பொருட்களுடன் கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வருவாராம். அப்படி வரும் போது போலீசார் மடக்கி விசாரித்தால், வீட்டை காலி செய்து வேறு வீடு மாறி செல்கிறோம் என்றும், தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்றும் போலீசாரிடம் கூறி தப்பித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இது போல பலமுறை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டில் அவரது வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் வரை பண பறிமாற்றம் நடைபெற்று இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.