பூந்தமல்லியில் அரிசி கடையில் ரூ.5.20 லட்சம் கொள்ளையடித்து விட்டு, நாடகமாடிய கடை ஊழியர்கள் 2 பேரை பூந்தமல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
பூந்தமல்லியை அடுத்த திருமழிசை பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 62). இவர் பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் களஞ்சியம் டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த கடையில் பூந்தமல்லியை அடுத்த கூடப்பாக்கத்தை சேர்ந்த ஜேம்ஸ்(வயது 21), திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா(வயது 22) இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடையின் பக்கவாட்டு கதவு திறந்து கிடப்பதாக ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது கடையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடை ஊழியர்கள் ஜேம்ஸ், சிவா இருவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:
சம்பவம் நடந்த கடையில் வேலை செய்து வந்த ஜேம்ஸ், மற்றும் சிவா இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ தினத்தன்று பிற்பகலில் கடையின் பக்கவாட்டு கதவின் சாவியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டனர். இரவு கடை மூடிவிட்டு ராஜேந்திரன் சென்ற பிறகு கடைக்கு வந்த ஜேம்ஸ், மற்றும் சிவா இருவரும் தயாராக வைத்திருந்த சாவியின் மூலம் கடையின் பக்கவாட்டு கதவை திறந்து கல்லாவில் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் இருவரும் சேர்ந்து நசரத்பேட்டையில் வைத்து பணத்தை பங்கு போட்டுள்ளனர். சிவா தனக்கு கிடைத்த பணத்தை நள்ளிரவில் உறவினரிடம் சென்று கொடுத்துள்ளார். அவர் அதை வாங்க மறுத்து கண்டித்ததுடன், போலீசில் பிடித்துக் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து சென்ற சிவா, கடையின் உரிமையாளரான ராஜேந்திரனுக்கு போன் செய்து கடையின் பக்கவாட்டு கதவு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே சம்பவ இடத்துக்கு வந்த ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் சிவா முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதன் பிறகுதான் ஜேம்ஸ்வும், சிவாவும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடித்து பணத்தை பங்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவாவை கைது செய்த போலீசார் உடனடியாக கூடப்பாக்கம் சென்று அங்கு வீட்டில் பதுங்கியிருந்து ஜேம்ஸையும் கைது செய்தனர். இருவரிடமிருந்து ரூ.4 லட்சத்து ஆறாயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலை செய்த இடத்திலேயே கொள்ளையடித்து விட்டு, கடை உரிமையாளருக்கு போன் செய்து கடையின் கதவு திறந்து கிடப்பதாக கூறி நாடகமாடிய இருவரையும் போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது. இது போல இவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளார்களா என்ற கோணத்திலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Chief Reporter
Ezumalai
#mathinews #mathitamil #police #topnews #