பூண்டி ஏரியில் மீன் பிடிக்க படகில் சென்ற மீனவர் திரும்பி வரும் போது மயங்கி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த பரிதாபம் . தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் கிராமத்து இளைஞர்கள் படகில் சென்று ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடலை மீட்டனர்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மீனவர் கண்ணாளன் மகன் ஆனந்தன் (வயது 48). இவருக்கு ரெபேகால் என்ற மனைவியும் விஷால் என்ற 11 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார். பின்னர் மீன் பிடித்துக்கொண்டு பிற்பகல் வீட்டிற்கு திரும்பும் போது ஆனந்தன் திடிரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார். இதனைக் கண்ட பூண்டி ஏரிக்கரை மீது நின்று கொண்டிருந்த அப்பகுதியினர். உடனடியாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் தீயணைப்பு துறையினர் வராததால் அப்பகுதி இளைஞர்கள் ஆனந்தன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு ஏரியில்சேற்றில் சிக்கியிருந்த ஆனந்தனின் உடலை கிராம இளைஞர்கள் மீட்டனர். மீன்பிடித்த போது மயங்கி ஏரிக்குள் ஆனந்தன் விழுந்தபோது அவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புல்லரம்பாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.