திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் சார்பனார்பேட்டை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்திரசேகர் (வயது 35). அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
தனது அக்கா மகள் வள்ளி என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சஞ்சனா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர்.
அந்த வீட்டை அடமானம் வைத்துள்ள நிலையில் தனக்கு பாகம் தரவில்லை எனக்கூறி அவ்வப்போது வீட்டில் இருந்தவர்களிடம் சந்திரசேகர் சண்டையிட்டு வந்துள்ளார். அப்போது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 9-ந் தேதி மது போதையில் இருந்த சந்திரசேகர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது திடீரென தன் மீது தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சந்திரசேகரின் மனைவி வள்ளி களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.