செங்கல்பட்டு மாவட்டத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 4 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரபாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வருண் (வயது 20). இவர் சென்னை மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் மிகவும் நெருங்கி பழகியதன் விளைவாக திருமணத்திற்கு முன்னரே விஜயலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்ட வருண், யாருக்கும் தெரியாமல் மாடம்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் விஜயலட்சுமியை தங்க வைத்துள்ளார். பின்னர் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 4 மாதங்களான பின்னர், தன்னையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு வருணிடம் விஜயலட்சுமி வற்புறுத்தி உள்ளார்.
அதன்படி தனக்கு திருமணமாகி விட்டதாகவும், ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வருணின் பெற்றோர் குழந்தையையும், விஜயலட்சுமியையும் எங்கேயாவது விட்டு விட்டு வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் செய்வதறியாது முழித்த வருண், தனது நண்பருக்கு திருமணமாக நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத காரணத்தால் இந்த குழந்தையை அவர்களிடம் கொடுத்து விடலாம், தேவைப்படும் பொழுது குழந்தையை சென்று பார்த்து வரலாம் என்று கூறி குழந்தையை பெற்றுச் சென்றுள்ளார்.
குழந்தையை வாங்கிச் சென்று இரண்டு மாதங்களான பின்னரும், ஒரு முறை கூட குழந்தையை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பை வருண் ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளம் பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வருணை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குழந்தையை விஜயலட்சுமியிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதனை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு குழந்தையை கழுத்தை நெறித்து கொலைசெய்து அங்கேயே புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக வருண் சொன்ன பகுதிக்கு சென்று அங்கு புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த வருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 மாத குழந்தையை தகப்பனே கொலை செய்த கொடூரம் - இளம் திருமண ஜோடி - செங்கல்பட்டு - மதி செய்திகள் - mathi news Tamil