திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகாலனியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பாம்புகள் சுற்றி திரிவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கு வழக்கம்போல் மாணவர்கள் வந்தனர். மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று செல்வதை கண்ட மாணவர்கள் அலறியடித்தபடி பள்ளியை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
இதனை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பள்ளியின் கழிவறைக்கு அருகே பதுங்கியிருந்த சுமார் 3 அடி நீளமுள்ள நீர்ப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பள்ளிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பள்ளி வளாகத்தில் மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்றவும். சேதமடைந்த பள்ளி சுற்று சுவரை சீரமைக்கவும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்.