அமெரிக்காவில் ஓபன்ஏஐ முறைகேடு பற்றி குற்றம்சாட்டிய இந்திய இளம் ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2021இல் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இந்தியாவை சேர்ந்த சுசீர் பாலாஜி (26), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (OpenAI) நிறுவனத்தில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், ChatGPT-யை உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாக இருந்துள்ளார். இதுதவிர WebGPT மற்றும் GPT-4 போன்ற பிற திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இந்த நிலையில், அந்தப் பணியில் இருந்து வெளியேறிய அவர் கடந்த அக்டோபர் மாதம், ‘தி நியூயார்க் டைம்ஸ்’க்கு பேட்டியளித்திருந்தார். அதில், காப்புரிமை தரவை OpenAI நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாகக் குற்றம்சாட்டியிருந்தார். ”ஓப்பன்ஏஐ நிறுவனம் தங்களது காப்பிரைட் விதிகளுக்கு உட்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தளத்தின் பயிற்சிக்கு பயன்படுத்தியது. இது, வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரை கடுமையாகப் பாதிக்கிறது. OpenAI தகவல்கள் ChatGPT-யை பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நான் சொல்வதை நீங்களும் நம்பினால், இந்நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். இது ஒட்டுமொத்த இணைய சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைதல்ல” எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், ”இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இந்த சமூகத்துக்கு பெரும் பலன்களை அளிப்பதை விடவும், மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என நம்புகின்றேன். ஒட்டு மொத்தமாக இந்த இணையதள சூழல் முறையானது நீடித்திருக்கும் மாதிரி அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தன்னுடைய கடைசி வலைதளப் பதிவில், “ஆரம்பத்தில் பதிப்புரிமை, நியாயமான பயன்பாடு போன்றவற்றைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் GenAI நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் பார்த்தபிறகு ஆர்வமானேன். நான் சிக்கலை நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சித்தபோது, பல உற்பத்தித் திறன் கொண்ட AI தயாரிப்புகளுக்கு நியாயமான பயன்பாடு மிகவும் நம்பமுடியாத பாதுகாப்பாகத் தோன்றுகிறது என்ற முடிவுக்கு வந்தேன்" எனப் பதிவிட்டிருந்தார். இவரது கருத்தை நிரூபிக்கும் வகையில் காப்பிரைட் சட்டத்தை மீறியதாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், கடந்த நவம்பர் 26ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்பது என்ன?
மனிதரைப்போலவே விஷயம் ஒன்றைக் கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, இவை தொடர்பான அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்குத் தரும் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. இது, இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தொழில்நுட்பத்தால் அதிக பாதிப்புகளும் வேலை இழப்புகளும் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.