BJP members blocked by a herd of sheep! Administrators argue with police - mathinews
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, நீதிகேட்டு மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக பெண் நிர்வாகிகள் ஊர்வலமாக செல்ல இருந்தனர். இதனை தடுத்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து ஆடுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தையடுத்து நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அக்கிரமத்தை எதிர்த்து போராட வந்தோம். ஆனால் இவர்கள் எங்களை கைது செய்து ஆடு மாடுகள் அடைக்கும் கொட்டைக்கு பக்கத்தில் அடைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தின் சார்பில் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். ஆனால் எங்களால் சுவாசிக்க கூட முடியவில்லை. எல்லாமே போராடித்தான் பெற வேண்டுமா?" என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து. குற்றத்தில் ஈடுபட்டவர் அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உரிய தண்டனை பெற்று தருவதாக காவல்துறை உறுதி அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்த வன்கொடுமைக்கு எதிராக பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்று பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தனது. மதுரை சிம்மக்கலில் உள்ள செல்லாத்தமன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி சிலை முன்பு இன்று காலை திரண்ட பாஜகவினர், தீச்சட்டி ஏந்தி சாமியாடி பின்னர் பேரணியை தொடங்க முயன்றனர். பேரணிக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமை தாங்கியிருந்தார். ஆனால், பேரணிக்கு காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது.
இருப்பினும் அனுமதியை மீறி பேரணியை பாஜகவினர் நடத்த முயன்றனர். பாஜகவின் திட்டத்தின்படி, பேரணி திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும் என்றும், முடிவில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருந்ததாகவும் பிளான் செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ் பேரணியை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த மண்டபத்திற்கு பக்கத்தில் ஆட்டு கொட்டகை இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்திற்கு அழைத்து வந்தபோது ஏற்கெனவே இதில் சில ஆடுகள் இருந்தன. பாஜகவினர் மண்டபத்தில் அடைக்கப்பட்ட பின்னர் மேலும் சில ஆடுகளை உரிமையாளர் கொட்டகைக்கு ஓட்டி வந்தார். இதனை கண்ட பாஜகவினர் போலீசாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டின் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாகவும், அதை உடனடியாக மண்டபத்தின் அருகிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், அல்லது எங்களுக்கு வேறு இடம் வழங்கப்பட வேண்டும் என்று போலீசாரிடம் வாக்கவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews